இது தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் வீழ்ச்சியா?

நண்பர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு காணொளியை வெளியிட்டு இருந்தார். அதனை பார்த்த பிறகு மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். யார் ஒருவரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது என்னுடைய நோக்கம் அல்ல, ஆனால் ஒரு பெரிய பொறுப்பில் உள்ள நபர்கள் போதிய தரவுகளோ, ஆய்வுகளோ இன்றி இவ்வாறு பதிவிடும்போது அதனை சுட்டிக்காண்பித்து அதனை மாற்ற முயற்சிப்பதும், மக்களுக்கு தவறான கருத்து சென்றுவிடக்கூடாது என்பதற்காக அவர்களின் கருத்துக்களை தகுந்த ஆதாரம் கொண்டு தகர்த்து எறிவது எனது பெரும் பொறுப்பாக உணர்கிறேன்.

கொஞ்சம் வரலாற்றை பேசிவிட்டு நண்பரின் காணொளிக்கு செல்வோம். இந்தியாவிலேயே முதல்முறையாக பாடநூல் கழகம் தமிழக அரசால் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் 1970 ஆண்டு உருவாக்கப்பட்டது. நீதிக்கட்சி காலத்தில் சென்னை மாகாணத்தில் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத்திட்டம், பின்பு முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களால் தமிழ்நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டு பின்னர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டு இன்றளவும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இலவச பேருந்து, இலவச காலணிகள், இலவச நோட்டுப்புத்தகம், இலவச புத்தக பைகள், இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி மற்றும் தற்போது முதலமைச்சர் காலை உணவுத்திட்டம் என்று பல சிறப்பான திட்டங்களால் தமிழகம் இன்று கல்வியில் சிறந்து விளங்குகிறது.

ஒரு அரசு ஏன் இவ்வளவு இலவசங்களை கொடுத்து குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும்? இதற்க்கு விடை தெரிய ஒரு நூற்றாண்டு பின்னோக்கி செல்லவேண்டும். காலகாலமாக கல்வி மறுக்கப்பட்ட சமூகம் தான் இது, நாம் இன்று பெரு நகரங்களில் அமர்ந்து கொண்டு யாரு சார் சாதி பாக்குறா என்று நாம் பினாத்திக்கொண்டு இருக்கும் அதே வேலையில் தான் தென்கோடியில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண் சமைத்த உணவை இடைநிலை சாதியை பெற்றோர்கள் தங்களில் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது என்று போராட்டம் நடத்துகிறார்கள். அந்த பெற்றோர்களை குறை சொல்லி ஒன்றும் இல்லை, காலகாலமாக அவர்களின் மண்டையில் புறையோடிப்போன சாதிய வன்மம் அவ்வாறு அவர்களை செய்யத்தூண்டுகிறது. ஒருவேளை இப்போது உள்ளது போல கல்வி வாய்ப்புகள் அந்த பெற்றோர்களுக்கும் கிடைத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது.

ஒரு சமூகம் மட்டுமே பெற்றுவந்த குலக்கல்வியை கிறித்தவ மிஷினெரிக்கள் அனைவருக்குமான பொது கல்வியாக மாற்றின, இந்தியா என்ற கட்டமைப்பு உருவான பின்னர், அடுத்து வந்த அரசுகள் பள்ளிகளை அரசுடைமை ஆக்கின. அப்போதும் பொருளாதாத்தில் பின்தங்கிய அடித்தட்டு மக்களுக்கு கல்வி ஒரு எட்டாத கனியாகவே இருந்தது. பின்னர் இலவசக்கல்வி, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்கல்வி என பல்வேறு தொலைநோக்கு திட்டங்களினால் தமிழகம் இன்று கல்வியில் தலை நிமிர்ந்து முன்னணி மாநிலமாக நிற்கிறது. இதற்க்கு பெரும் காரணம் தமிழ்நாட்டு அரசுப்பள்ளிகள் தான் என்பதை மறுக்க இயலாது.

இரண்டு கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு, உங்கள் காணொளிக்கு வருகிறேன். நீங்கள் உங்கள் சுற்றத்தில் உள்ளதை மட்டுமே பார்த்து இந்த பதிவை இட்டதாக தெரிகிறது. உயர்கல்வி வாசனை கூட தெரியாத பல கிராமங்கள் இன்றும் தமிழகத்தில் இருக்கின்றன, அந்த பள்ளிகளுக்கு சென்று அங்கு படிக்கும் பிள்ளைகளின் முகங்களை பார்த்தால் இப்படி அரசுப்பள்ளிகளை விமர்சிக்கும் எண்ணம் உங்களுக்கு வந்திருக்காது. ஓராசிரியர் பள்ளி, ஒற்றை இலக்க மாறவர்களை கொண்ட பள்ளி என்கிறீர்கள், என்ன செய்யலாம் அந்த பள்ளிகளை முடிவிடலாமா? ஒற்றை இலக்க மாணவர்களுக்காக அவர்களின் கல்விக்காக முனைப்புடன் அவர்களின் எதிர்காலத்திற்காக செயல்படும் அந்த பள்ளிகளை பாராட்டாவிட்டாலும் விமர்சிக்காமல் இருப்பதே அறம்.

உங்கள் காணொளியில் CBSE பள்ளிகளில் தான் அரசு அதிகாரிகளும், என்னை போன்ற நகரவாசிகளும் தங்களின் பிள்ளைகளை சேர்க்கிறார்கள் என்கிறீர்கள், ஏன் கூடாது? சென்னை வந்த புதிதில் நான் பொது பேருந்தில் தான் அலுவலகம் செல்வேன், பின்பு இருசக்கர வாகனம், இப்போது கார். தேவைக்கும் சொகுசிற்கும் வித்யாசம் உள்ளதல்லவா. நான் அரசுப்பள்ளியில் படித்தேன், என் மகன் தனியார் பள்ளியில் படிக்கிறார், நாளை அவனுடைய குழந்தைகள் வெளிநாடுகளில் கூட படிக்கக்கூடும். இது தான் சமூக பொருளாதார வளர்ச்சி. அரசியல்வாதிகள் அரசு மருத்துவமனைக்கு செல்லமாட்டார்களா? அரசு அதிகரிகள் அரசு பள்ளிகளில் சேர்க்க மாட்டார்களா? என்று மொக்கையான வாதத்தை இன்னும் எத்தனை நாட்கள் வைப்பீர்கள். விளிம்பு நிலை மனிதர்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் செயல்படும் பொது நிறுவனங்களில் நாமும் போய் உட்கார்ந்து கொண்டால் அது யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒருநாள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கோ அல்லது அருகில் இல்ல அரசு பள்ளிகளுக்கோ சென்று பாருங்கள் எத்தனை மக்கள் இன்னும் அதனை தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடமாக பார்க்கிறார்கள் என்பது புரியும்.

ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள், இன்னும் அரை நூற்றாண்டு காலத்திற்க்குள், இன்று எப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ சீட்டிற்கு முண்டியடிக்கிறார்களோ அதே போன்று அரசுப்பள்ளிகளில் சேர்க்க முண்டியடிப்பார்கள். அப்போது இந்த CBSE பள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

நன்றி,
ராஜன் விஜயன்