எங்கள் ஊரும் சிலர் பேரும்

எங்கள் ஊர் திண்டுக்கல் மாவட்டம், சின்ன பள்ளப்பட்டி கிராமம், அந்தோனியார் தெரு. இது ஒரு தெரு அல்ல எங்கள் ஊரின் பெயரே அந்தோனியார் தெரு தான், அருகில் இருக்கும் AB நகரும் எங்கள் ஊரின் ஒரு அங்கம். தோராயமாக 500 முதல் 600 குடும்பங்கள். பெரும்பான்மையாக கிறிஸ்தவர்கள், மற்றும் இஸ்லாமியர்கள் சிறுபான்மையாக இந்துக்கள் வாழும் ஊர். AB நகர் என்பது தோழர் A பாலன் அவர்களின் நினைவாக வைக்கப்பட்ட பெயர். முன்பு தோல்பதனிடும் தொழிலாளர்கள் அதிகம் வாழ்ந்த பகுதி, ஆழ்ந்த பொதுவுடைமை கொள்ளகைள் வேரூன்றிய பகுதி.

என்னுடைய ஊரின் சிறப்பாக நான் நினைப்பது அங்கு வாழும் சில மனிதர்களின் பெயர்கள் தான், ஒரு சமூகம் எப்படி இப்படி உலக அரசியல் தலைவர்களின் பெயரையும், சிந்தனையியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பெயரையும் கொண்டிருக்க முடியும்? உண்மையாகவே வியப்பாகவும் என் முன்னோர்கள் மீது அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் கூடுகிறது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் படுத்தப்பட்ட சமூகம். நன் பேசும் அரசியல் கூட இந்த மரபில் இருந்தே வந்திருக்கக்கூடும்.

சரி அப்படி என்ன அதிசய பெயர்கள்? பார்ப்போம்

என்னுடைய சித்தப்பாவின் பெயர் சாக்ரடீஸ், கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த உலகப்புகழ் பெற்ற தத்துவ அறிஞர். இருவரும் இப்போது இல்லை ஆனால் உங்களின் பெயர்கள் எப்போதும் மறையாது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு அண்ணன்கள் ஒருவர் பெயர் காரல் மார்க்ஸ், இன்னொருவர் பெயர் ஏங்கல்ஸ் உலக அரசியலுக்கு கமினியுஸ கொள்கைகளை கொடையாக வழங்கிய மாபெரும் மேதைகள். இவர்களுக்கு ஒரு தம்பி அவரின் பெயர் சூ-என்லாய் சீன குடியரசின் முதல் பிரதமர். என்னால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை.

என்னுடைய ஒரு தாத்தாவின் பெயர் டாங்கே, இந்திய கம்மிநியூஸ்ட் கட்சியின் ஒப்பற்ற தலைவரின் பெயர் (அம்ரித் டாங்கே). இன்னொரு நண்பரின் பெயர் மண்டேலா, அனைவரும் அறிந்த கறுப்பின போராளி. ஒரு அண்ணனின் பெயர் டார்வின் மாபெரும் இயற்க்கை அறிவியலாளர். ஒரு அண்ணனின் பெயர் கென்னடி, அமெரிக்காவின் முன்னால் அதிபர் அவரின் காலத்தில் தான் மனிதன் நிலவில் காலடி வைத்தான்.

நான் வியக்கும் இன்னொரு பெயர் முசோலினி, நம்ப முடிகிறதா உங்களால் ஒரு அண்ணனின் பெயர் முசோலினி என்னோடு அடிக்கடி அரசியல் விவாதம் செய்யும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர். நல்லவர்.

என்னுடைய மாப்பிள்ளையின் மகனின் பெயர் பிடல் காஸ்ட்ரோ. இன்னொரு மாப்பிள்ளையின் பெயர் டென்சிங், எவர்ஸ்ட் சிகரத்தை முதலில் தொட்டவர். இவர்களின் அப்பா அதாவது என்னுடைய சொந்த மாமாவின் பெயர் ரோமியோ, வரலாறுகளில் பேசப்பட்ட ஜூலியட்டின் காதலன். இன்னொரு மாமாவின் பெயர் டயாபாலிக் பிரபல இத்தாலிய கதைகளில் வரும் கதாபாத்திரம்.

ஒரு அண்ணனின் பெயர் கிசிங்கர், நோபல் பரிசுபெற்ற அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர். இன்னொரு அண்ணனின் பெயர் மில்லர், அமெரிக்க முன்னாள் அமைச்சர். அவரின் அண்ணனின் பெயர் ரோஜர், பிரபல எழுத்தாளர் (ரோஜர் மேக்வாக்).

ஜென்னர் இது ஒரு அண்ணனின் பெயர், இங்கிலாந்தை சேர்ந்த அறிவியல் மேதை. இன்னொரு அண்ணனின் பெயர் கெய்ட்டன் இத்தாலிய அரசியல்வாதி. ஒரு நண்பரின் பெயர் மரடோனா, அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஆட்டக்காரர்.

ஒரு அண்ணனின் பெயர் பிரஸ்னேவ் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலர்.

இன்னும் பல பெயர்கள் உள்ளன, லெனின், போர் பியர்ஸ், ஜேம்ஸ், வில்லிங்கர், சார்லஸ், ஜோதி பாஸ், பெத்திலிக், பிலிப், ஹடிபாய்,உமாநாத், வினோபா, ஜார்ஜ், அஜிஜாக்கப், நிப்சன்,எட்வின், நெப்போலியன், ஹென்றி, பிர்லிங்கர், ரொனால்ட் ரீகன், கிளமெண்ட், எட்பேர்க், அலெக்சாண்டர், லியான்டர், பிராங்கிளின், ஆண்ட்ரூ, மாலண்டோ, டிட்டோ, ஜெரோம், குசாக்கி, பிராக்ஸ்டன், லயான், ரிகோரின், ஓனாசிஸ், அந்துவான், கிளிண்டன், சர்ச்சில்.

பெயர்கள் வெறும் பெயர் அல்ல அது ஒரு வரலாற்று ஆவணம், நன்றியுணர்ச்சியின் வெளிப்பாடு.