அறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கை

இருமொழிக் கொள்கை பற்றி பேசுவதற்கு முன்பு இந்திய புவியியல் கூறுகளை பற்றி தெரிந்துகொள்வோம். இந்தியா ஒற்றை சமூகமோ ஒரு நாடோ அல்ல, இது ஒரு கூட்டுசமுகம் பல நாடுகளின் ஒன்றியம். உதாரணமாக குஜாரத் ஒரு மாநிலம் என்றாலும் அவர்களுக்கு என்று ஒரு தனி மொழி தனி பண்பாடு உள்ளது, அதே போன்று தான் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, மஹாராஷ்டிரா என அனைத்து மாநிலங்களும் மொழிவழியாக பிரிக்கப்பட்டு ஒருங்கிணைந்த கூட்டு சமூகமாக இயங்குகிறது.

இந்திய ஒன்றிய அரசின் கணக்கின்படி தோராயமாக 1652 மொழிகளை பேசும் மக்கள் உள்ளனர், அவற்றில் 387 மொழிகள் உயிர்ப்புடன் குறிப்பிடத்தகுந்த அளவு மக்களால் பேசப்படுகின்றன. மேலும் இந்திய ஒன்றிய அரசு அம்மொழிகளின் 22 மொழிகளை அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகளாக பட்டியலிட்டுள்ளது. அவ்வாறு குறிப்பிட்ட 22 மொழிகளை மட்டுமே அங்கீகரித்திருப்பதில் கூட ஒரு மறைமுக அரசியல் உள்ளது. காரணம் சில ஆயிரம் மக்கள் பேசும் சமஸ்கிருத மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் சில லட்சம் மக்கள் பேசும் துளு மொழிக்கு கிடைக்கவில்லை. இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம் யார், எந்த கூட்டம் நம் மொழிகளையும் நம் பண்பாட்டையும் தீர்மானிக்க துடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை.

மும்மொழிக்கொள்கை வருவதால் என்ன பிழை? உதாரணமாக மலையாளம் பேசும் உங்கள் உற்றத்தார் அவர்களில் தாய்மொழியை கற்றுக்கொள்ள நாம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது தானே ஜனநாயகம் என்பது உங்கள் கேள்வியாக இருந்தால் உங்களுக்கு அரசியல் தெரியவில்லை அல்லது தெரிந்துகொள்ள மறுக்கிறீர்கள் என்று பொருள்.

சரி எப்படி, உனக்கு மட்டும் இந்த மொழி அரசியல் தெரியுமா? என்றால் தெரியும் கண்டிப்பாக தெரியும். என்ன பார்ப்போம்.

இந்ததியாவில் கல்வி என்பது பொதுப்பட்டியல், அதாவது ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இனைந்து நிர்வகிக்க கூடிய துறை. இங்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளிலும் உண்டு மாநில அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளும் உண்டு. இங்கு மாநில அரசுகளுக்கு என்று மொழிக்கொள்கைகள் உண்டு ஆனால் ஒன்றிய அரசிற்கு தனியாக மொழிக்கொள்கை இருக்க முடியாது ஆனால் சூழல் அப்படியா இருக்கிறது, மயிரில் தொடங்கி தயிர் வரைக்கும் வலிந்து இந்தியை திணிக்க துடிக்கிறது ஒன்றிய அரசு. அப்படி இருக்க உங்களில் கேள்வி யாரை நோக்கியதாக இருக்கவேண்டும் ஒன்றிய அரசையா? அல்லது மாநில அரசையா? இருக்கட்டும் உங்கள் கேள்வி உள்நோக்கம் இல்லாத பொதுவான கேள்வி என்றே வைத்துக்கொள்வோம் அரசியல் தவிர்த்து எதார்த்த களத்திற்கான பதிலும் உண்டு.

உதாரணமாக நீங்கள் கூறுவது போல தமிழக பள்ளிகளில் (லட்சங்கள் தொடங்கி ஆயிரங்கள் வரை நன்கொடை வாங்கும் தனியார் பள்ளிகள் உட்பட) நீங்கள் முன்மொழியும் மும்மொழிக்கொள்கை சாத்தியமா? 1% கூட சாத்தியம் அல்ல கரணம், தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களில் விகிதாச்சாரம் 70:1 அதாவது 70 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர். இதுவே இந்திய ஒன்றியத்க்தின் சராசரி 100:1

ஒரு நகர்ப்புற அரசு தொடக்கப்பள்ளியை எடுத்துக்கொள்வோம், தோராயமாக 200 மாணவர்கள் படிக்கக்கூடும், அதிகபட்சமாக 6 அல்லது 8 ஆசிரியர்கள் என்று வைத்துக்கொண்டாலும், சத்துணவு ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர்கள் போக புத்தக பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் 6 பேர். நீங்கள் கூறுவது போல மலையாளம், கன்னடம், தெலுகு போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுக்கு மட்டும் ஆசிரியர்கள் வைத்துக்கொண்டால் கூட புதிதாக 21 ஆசிரியர்கள் சேர்க்க வேண்டும். கிட்டத்தட்ட 250% ஆசிரியர்களை கூடுதலாக பணியமர்த்த வேண்டும். அது சாத்தியமா?

பிறகு ஏன் ஒன்றிய அரசு மும்மொழிக்கொள்கையை வலிந்து திணிக்கிறது, அவர்களால் 21 ஆசிரியர்களை அல்ல 2 ஆசிரியர்களை கூட நியமிக்க இயலாது. அவர்கள் மனதில் உள்ள இருவிரலை காட்டி ஒன்றை தொடு என்பது அல்ல ஒரு விரலை காட்டி ஒன்றை தொடு என்பதே. பெரும்பான்மையான மாணவர்கள் இந்தியை தேர்ந்தெடுத்தால் மற்ற மாணவர்களும் வம்படியாக இந்தியை கற்க வேண்டிய சூழல் உருவாகும். இதுதான் அவர்களின் மறைமுக இலக்கு.

சரி இதற்க்கு தீர்வு என்ன? அறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் சொன்னது தான், வீட்டில் இரண்டு நாய்கள் வளர்க்கிறோம் ஒன்று பெரியது ஒன்று சிறியது என்றால் நாய்க்கூண்டில் இரண்டு வாயில்கள் வைக்கவேண்டிய அவசியம் இல்லை பெரிய நாய்க்கான வழியிலேயே சிறிய நாயும் சென்று வரும். நாம் வளர்க்கும் பெரிய நாய் தான் ஆங்கிலம், அதைக்கொண்டு உலக மக்களுடன் உரையாடும் போது உள்ளூர் மக்களுக்கும் அதுவே போதும் என்பது தான்.

இது சர்வாதிகாரம் இல்லையா? என் மலையாளம் பேசும் உற்றாருக்கு என்ன பதில் என்றால்? மாநில அரசு மொழி சிறுமான்மையினர் கணிசமாக வாழும் பகுதிகளில் ஓரியண்டல் பள்ளிகளை திறந்துள்ளது உதாரணமாக உருது மொழி பேசும் மக்கள் உள்ள பகுதிகளில் அரசு ஓரியண்டல் பள்ளிகள் இன்னமும் இயங்குகின்றன. இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், தெலுங்கு ஓரியண்டல் பள்ளிகள் என பல தரப்பட்ட மொழிபேசும் மக்கள் பயிலும் பள்ளிகள் நீண்ண்டகாலமாகவே இங்கு இயங்கிக்கொண்டு தான் இருக்கின்றன. தாய்மொழி கற்க விரும்புபவர்கள் அங்கு தங்களில் குழந்தைகளை சேர்க்கலாம்.

மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறில்லை ஆனால் எதார்த்தம் புரியாமல் கேள்விகளை எழுப்பும் உங்களின் உள்நோக்கம் பற்றி சந்தேகம் எழுப்புவது அறிஞர் அண்ணாவின் மாணவனாக என்னுடைய தலையாய கடமை என்பதை உணர்வேன்.

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!