இது திராவிட மாடல் ஆட்சி

இதுவரை மறைமுகமாக அரசியல் பேசிக்கொண்டு இருந்த தாங்கள் நேரடியாக அரசியல் பேச வந்தமைக்கு முதற்கண் வாழ்த்துக்கள்.

நீங்கள் எழுதிய ஞாயிறு கடிதம் சமூகவலைத்தளங்கள் மூலமாக கிடைக்கபெற்றதது. 15/10/2023 அன்று தங்கள் எழுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கைகள் தொடர்பான கடிதத்தில் எனக்கு சில மாற்றுக்கருத்துக்கள் உள்ளது, அதனை மிக்க பணிவுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் கட்சி வாரியாக உறுப்பினர்கள் அமர வைக்கப்படுகின்றனர். அதுதான் மரபு அனைவரையும் கலந்து அமர சொல்கிறீர்களா? என்பது எனக்கு தெரியவில்லை. பொதுவாக இடதுசாரிகள், வலதுசாரிகள் என்ற சொற்கள் பேச்சுவழக்கில் உள்ளது, அந்த சொற்களுக்கான காரணமே மக்கள் பிரதிநிதிகளை அவ்வாறு அமர வைப்பதில் இருந்துதான் வந்தது என்று ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் குறித்து பேசுகிறீர்கள், ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவி, எதிர்க்கட்சி கொறடா போன்ற பதவிகள் உள்ளனவே தவிர எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி அங்கீகரிக்கப்பட்ட பதவி அல்ல. அது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் சட்ட மன்றத்திக்கும் அதன் சபாநாயகருக்குமே உள்ளது. நாளை இணை தலைவர், துணை தலைவர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று அனைத்து பதவிகளுக்கும் இருக்கை கேட்டால் என்ன செய்வது?

துணைத்தலைவர் இருக்கை விவகாரம் சிக்கல் உள்ளதாய் இருக்கிறது என்கிறீர்கள், அது குறித்து விவாதிப்பதனால் நேரவிரயம் ஆகிறது என்கிறீர்கள். யார் இந்த விவகாரத்தை கிளப்பியது. சட்டமன்றமே இது குறித்து தான் பேசிக்கொண்டு இருப்பது போல ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறீர்கள். சென்ற வாரம் இது குறித்து கூட்ட தொடரின் மூன்றாவது நாளில், மாண்புமிகு சட்டமன்ற எதிர்காட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அதில் அவர் கூற வருவது எதிர்க்கட்சி தலைவருக்கான இருக்கை என்பதை தாண்டி அவரின் அருகில் அமர்ந்துள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னேர்செல்வம் இடமாற்றம் குறித்ததே. அடிப்படை அரசியல் தெரிந்த அனைவரும் இதற்கான காரணத்தை அறிவர். எதிர்க்கட்சி என்பதை ஆளும்கட்சியை வழிநடத்தும் அட்சாணியாக இருக்க வேண்டும் ஆனால் அவர்களின் உட்கட்சி பிரச்சனையை சட்ட மன்றத்தில் தீர்த்துக்கொள்ள நினைப்பது, அது குறித்து வீண் விவாதம் செய்து மன்றத்தின் மாண்பை குலைக்க முயற்சிப்பது முட்டாள்தனம்.

சரி, அது போகட்டும் பள்ளி மாணவர்கள் இருகைகளையும், சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கையையும் ஒப்பிடுகிறீர்கள் இது எப்படி சரி ஆகும். பள்ளி வகுப்பில் அமர்ந்து இருக்கும் மாணவர்கள் பல அணிகளாக இருக்க முடியுமா? அது என்ன விவாத கூடமா? அங்கு மாணவர்கள் கலந்து அமர்வது தான் இயற்க்கை அறம். ஆனால் சட்ட மன்றமோ, நாடாளுமன்றமோ அப்படியா? அங்கே தான் சட்டம் இயற்றப்படும், விவாதங்கள் நடைபெறும் அப்படி இருக்க இருக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உங்களுக்கு தெரியவில்லையா?

மன்றத்தில் உறுப்பினர்கள் பழகுவது குறித்து பேசுகிறீர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சிரித்து பேசிய காரணத்திற்க்காக பதவியை பறித்த இரும்பு பெண்மணிகளை பெற்றுருந்த மன்றம் இது. இந்த ஆட்சியில் தான் எதிர்க்கட்சிகளின் குரல் வெளியே கேட்கிறது அதற்கு காரணம் அண்ணா, கலைஞர் வழிவந்த திராவிட மாடல் ஆட்சி. சட்டமன்றம் உறுப்பினர்கள் பழகுவதற்கான இடம் அல்ல, விவாதிக்கும் இடம், நாட்டில் பழக ஆயிரம் இடங்கள் உள்ளன.

எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை அமைக்க சில கூட்டம் துடித்துக்கொண்டு இருக்கையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து அமர சொல்கிறீர்கள். நீங்கள் திமுக மற்றும் அதிமுகவை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்று குறிப்பிட்டு இவ்வாறு சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் அவர்களுக்கான இடத்தில் அமரவே இப்படி பஞ்சாயத்தை கூட்டுகிறார்கள் அவர்களா ஆளும்கட்சியுடன் அமரபோகிறார்கள்.

மேலும் உங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆளும்கட்சி எதிர்க்கட்சி அமைப்பு தெரியவில்லை என்று நினைக்கிறேன், காரணம் நம் சட்ட மன்றத்தில் திமுக மட்டுமே ஆளும்கட்சி, மற்ற அனைத்து கட்சிகளும் அதாவது அதிமுக உட்பட காங்கிரஸ், விசிக, பாஜக, முஸ்லீம் லீக், கம்னியூஸ்ட்டுகள் என அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சிகள் தான் அவர்கள் இப்போதும் கலந்து தான் அமர்கிறார்கள்.

மணிப்பூர் விவகாரம், சிஏஜி ஊழல், ஓபிசி இட ஒதுக்கீடு பிரச்சனை, பெண்களுக்கான போலி இடஒதுக்கீடு நாடகம், கொடநாடு விவகாரம் போன்ற ஆயிரம் விஷயங்கள் நாட்டில் உள்ளன, அவற்றை பற்றி பேசாமல் ஒன்றிற்கும் உதவாத இது போன்ற விவகாரம் குறித்து கடிதங்கள் எழுதி நேரத்தை வீணாக்காமல் ஆக்கப்பூர்வமாக எழுதுங்கள்.

இப்போது மட்டும் அல்ல அண்ணா என்ற ஒரு மாபெரும் அறிஞன் எப்போது எங்கள் மண்ணில் உதித்தானோ அப்போதே மாறிவிட்டது இந்த உலகிற்க்கே முன்மாதிரி சட்டமன்றமாய்.

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.