ஜூம் பாமிங் – இணைய தாக்குதல்

அந்த சந்திப்பு மிகவும் நன்றாக தான் போய்க்கொண்டு இருந்தது, அந்த ஒரு நிமிடம் யாரும் எதிர்பார்க்கவே இல்லை. பல முறை கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் அன்று தான் அது எங்களுக்கே நடந்தது. ஜூம் இணையவழி தாக்குதல்.

சென்ற வாரம் வழக்கம் போல சென்னை வேர்ட்பிரஸ் குழுவின் வாராந்திர அமர்வு நடைபெற்றது, எப்போதும் நடைபெறும் அமர்வு போல இல்லாமல் இந்த வாரம் கலந்தாய்வு போல வைத்திருந்தோம். அமர்வு ஆரம்பித்து நன்றாக தான் போய்க்கொண்டு இருந்தது ஏறக்குறைய 25 பேர் இணைப்பில் இருந்தனர்.

திடீர் என்று இரண்டு நபர்கள் அமர்வின் உள்ளே நுழைந்தார்கள், இணையவழி அமர்வு மேலும் இலவச அமர்வு என்பதனால் யார் வேண்டுமானாலும் இதில் பங்கேற்கலாம், மிகவும் மும்முரமாக போய்க்கொண்டு இருந்த அமர்வில் ஒருவன் தனது திரையை முன்னறிவிப்பின்றி பகிர்ந்தான், அதில் மிகவும் கீழ்த்தரமான ஆபாச காணொளி ஓடிக்கொண்டு இருந்தது. அமர்வை ஒருங்கிணைத்துக்கொண்டு இருந்த எங்களுக்கு பேரதிர்ச்சி. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதுமட்டும் அல்லாமல் அந்த இருவரும் தொடர்ந்து ஆங்கிலத்தில் அல்லது ஏதோ புரியாத மொழியில் எங்களை ஏளனமாக பேசிக்கொண்டே இருந்தனர். கணநேரத்தில் சுதாரித்துக்கொண்டு அவர்களை அமர்வில் இருந்து நீக்கி விட்டோம்.

இருந்தாலும் எங்களால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர இயலவில்லை. பிறகு எங்களுக்கு நாங்களே சமாதானம் சொல்லிக்கொண்டு விருந்தினர்கள், பார்வையாளர்கள் அனைவரிடமும் மன்னிப்பை கேட்டுவிட்டு தொடர்ந்து அமர்வை நடத்தி முடித்தோம். விருந்தினர்களும் பார்வையாளர்களும் மிகுந்த முதிர்ச்சியோடு இதனை எடுத்துக்கொண்டார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் எங்களை சமாதானம் செய்தார்கள் என்றே சொல்லாம்.

ஒருவேளை அந்த அமர்வு குழந்தைகளுக்கானதாகவோ அல்லது குடும்பத்தினருக்கானதாகவோ இருந்திருந்தால் மிகவும் தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டு இருக்கும். சரி போனது போகட்டும் விசயத்திற்கு வருவோம், அவ்வாறு நடந்தால் என்ன செய்யலாம் அல்லது அவ்வாறு நடைபெறாமல் இருக்க என்ன செய்யலாம்.

இணையம் இன்று உலகை கைக்குள் கொண்டுவந்து விட்டது, வினாடி பொழுதில் கலிபோர்னியாவில் உள்ள என் நண்பரிடம் நான் பேசலாம், ஆஸ்திரேலியா நண்பர்களுக்கு நான் பாடம் நடத்தலாம். அனைத்தும் இணையத்தில் சாத்தியம் ஆனாலும் சில பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவெடிக்கைகள் மிகவும் இன்றியமையாதது.

  1. அமர்வை இணையவெளியில் நடத்த முதலில் என்ன பொறியை பயன்படுத்த போகிறோம் என்றும் அதில் பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன உள்ளது என்றும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  2. ஜூம் பொறி மூலம் நடத்தினால் அதில் அனைவரும் திரையை பகிரும் வசதியை கண்டிப்பாக நிறுத்தி வைக்க வேண்டும். யார் பேச்சாளரோ அவர் மட்டும் திரையை பகிருமாறு அமைப்பை உறுதிப்படுத்தி வைக்க வேண்டும்.
  3. கூகிள் மீட் என்றால் கண்டிப்பாக யார் வேண்டுமானாலும் அழைப்பில்லாமல் உள்ளே வருவதை நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.
  4. தனியாக ஒருவரையோ அல்லது ஒரு குழுவையோ அமைத்து பார்வையாளர்களை கண்காணிக்க வேண்டும். அரட்டை பெட்டியிலும் இதுபோன்ற தேவையில்லாத கருத்துகள் பகிரப்படலாம் ஆகவே அதையும் கவனமாக கண்காணிக்க வேண்டும்
  5. சரி ஒருவேளை நாம் அனைத்தையும் செய்தும் யாரேனும் இப்படி ஆபாச காணொளி அல்லது வேறு ஏதேனும் தேவையில்லாத கருத்தை பகிர்த்தால் முதலில் பதட்டம் அடைய கூடாது. அவர்களின் நோக்கம் பெரும்பாலும் நமக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்பதே, நாம் பதட்டம் அடைத்தால் அவர்களுக்கு அது சாதகமாக போய் விடும்.
  6. பொறுமையாக அல்லது சிரித்துக்கொண்டே பார்வையாளர்கள் மற்றும் பேச்சாளரிடம் மன்னிப்பை கேட்டு, இது இயல்பு தான் இது போன்று வேலை இல்லாதே நபர்கள் இப்படி தான் செய்வார்கள் என்று கூறிக்கொண்டே அவர்களை பிளாக் செய்ய வேண்டும்.
  7. அவர்கள் மீண்டும் இடையிறு ஏற்படுத்த வேறு பெயரில் வந்து முயலலாம் ஆகவே மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

உலகம் மிகவும் சிறிது தான், இணையம் அதை இன்னும் சிறிதாக்கி விட்டது. அனைத்திற்கும் ஒரு தீர்வு உண்டு. கவனமுடனும் பாதுகாப்போடும் இணையவழி அமர்வுகளை நடத்துவோம், வல்லவனுக்கு வல்லவவன் வரத்தான் செய்வான்

Leave a Reply