பொக்கிஷங்கள்

ஒரு நாள் நானும் என் பையனும் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தோம், அப்போது அவனுக்கு ஏறத்தாழ ஒன்றரை வயது. எழுந்து நடக்க முயலும் பருவம். ஆனால் அப்போதும் கொஞ்சம் துரு துரு என்று தான் இருப்பான்.

ஒளிந்து பிடித்து விளையாடிக்கொண்டு இருந்தோம். தவந்து போய் ஒரு அறைக்குள் ஒளிந்துகொண்டு அப்பா அப்பா என்றான். நானும் அவனை தேடுவது போல் தம்பி எங்க காணும் என்று தேடினேன். அவன் ஒளிந்துகொண்டு இருந்த அறையின் கதவு தானியங்கி கதவு உள்ளே சென்று பூட்டிக்கொண்டான். அவனுக்கு திறக்க தெரியவில்லை. எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர நானும் பேசிக்கொண்டே சென்றுவிட்டேன். அங்கு அவன் நின்றுகொண்டு அப்பா அப்பா அன்று அழைத்துக்கொண்டு இருந்தான்.

சிறிது நேரத்தில் என் மனைவி என்னிடம் வந்து தம்பி உள்ள மாட்டிக்கொண்ட விசயத்தை சொல்ல ஒரு நிமிடம் படபடப்பு தொற்றிக்கொண்டது. கதவை உள்பக்கமாக தான் திறக்க முடியும், அவன் கதவின் அருகிலேயே நிற்கிறான். சிரித்துகொண்டு இருந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக அழ ஆரம்பித்தான். கதவை தள்ளி உடைத்து திறக்க முடியாது அவன் கதவின் அருகிலேயே நிற்கிறான். பரபரப்பு பக்கத்து விட்டில் இருந்து கூட வந்து முயற்சி செய்தார்கள். என்ன செய்வது என்றே புரியவில்லை.

ஒரு யோசனை வந்தது. அறையின் பின் புறம் சென்று ஜன்னல் கதவை உடைத்து அவனை என்பக்கமாக அழைத்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தோம். அவனும் அப்பா என்று ஜன்னலின் பக்கம் வந்தான். பிறகு கதவை உடைத்து திறந்தோம். இதனை இங்கு பகிர்வதற்கு காரணம் விளம்பரம் அல்ல. ஒருவேளை அங்கு அந்த அறையில் ஜன்னல் இல்லாமல் இருந்தால்? அன்று முழுவதும் யாரிடமும் பேசவில்லை தொலைபேசியை அனைத்து விட்டு என் பையனுடன் மட்டுமே இருந்தேன். மீண்டு வர எனக்கு சில நாட்கள் ஆனது.

ஆனால் இன்று… “தம்பி அம்மா இருக்கேன் பயப்டாத தம்பி” என்று அம்மா அழைக்கிறாள் அவனோ “சரிமா” என்கிறான். அந்த குழந்தை நம்பிக்கொண்டு தானே இருந்து இருக்கும். எந்த பெற்றோரும் பிள்ளைகளை காயப்படுத்த வேண்டும் என நினைப்பதில்லை. சில கவன குறைவு தான். இந்த ஒரு மரணம் நமக்கு ஒரு ஆயிரம் பாடத்தை கற்று தந்துவிட்டது. தம்பி சுர்ஜித் மரணம் கடைசி விபத்தாக இருக்க வேண்டும்.

ஒன்றை மனதில் கொள்வோம். வருமுன் காப்பதே சிறந்தது. உங்கள் குழந்தைகள் மீது சபதம் எடுப்போம்.

1. கண்டிப்பாக உனக்காக நேரம் செலவு செய்வேன்.

2. உனக்கு தொலைபேசியை தர மாட்டேன் அதற்கு பதில் உனக்கு புத்தகங்கள், விளையாட்டு பொம்மைகள், கிண்டில் போன்ற அறிவு சார்ந்த பொருட்களை வாங்கி கொடுப்பேன்.

3. உன் மீதும் உன் சுற்றுப்புறத்தில் நிகழும் மாற்றத்தின் மீதும் எப்போதும் என் கவனம் இருக்கும்.

4. நம் விட்டின் முகவரியையும் என் தொலைபேசி எண்ணயும் உனக்கு மனப்பாடம் செய்ய வைப்பேன்.

5. உன் நண்பர்களுடனும் தொடர்பில் இருப்பேன்.

6. பருவம், காதல், காமம், இனகவற்சி, மற்றும் உடலின் மாற்ற கூறுகள் தொடர்பாக வெளிப்படையாக பேசுவேன்.

7. உனக்கு என்னிடம் விவாதம் செய்யும் உரிமையை அளிப்பேன்.

8. உன்னை யாரிடமும் ஒப்பிட மாட்டேன்.

9. உன்னிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முயற்சி செய்வேன்.

10. தோல்விகளை தாங்கிக்கொள்ள பயிற்சியும், வெற்றிகளை அடக்கத்தொடு அணுகும் அணுகுமுறையும் உனக்கு கற்றுக் கொடுப்பேன்.

இது உணக்காகவும் உனக்காக வாழும் எனக்காகவும் நான் எடுக்கும் சபதம்.

பிழை இருந்தால் மன்னியுங்கள், இதுதான் இப்போதைய தேவை. குழந்தைகள் பொக்கிஷங்கள். பாதுகாப்போம். பாடம் கற்போம்.