அன்று மாலை எப்போதும் போல அலுவலகத்தில் அனைவரும் வேலை பார்த்துக்கொண்டு இருந்தோம், திடீரென ஒரு அறிவிப்பு வந்தது. இன்று முதல் ஒருவாரம் அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்று. ஐயா ஜாலி என்பது போல தான் இருந்தது. அறிவிப்பு வந்தது தான் மிச்சம் உடன் வேலை செய்யும் பல நண்பர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கட் போட ஆரம்பித்தார்கள். ஒருவகையில் அன்று என் நிறுவனம் எடுத்தது மிக பெரும் முடிவு.
சரியாக எண்ணி ஒரேவாராம் கழித்து அரசு கொரோனா பொது முடக்கத்தை அறிவித்தது முதலில் 14 நாட்கள், பிறகு 21 நாட்கள், ஒரு மாதம், இரண்டு, மூன்று என உண்மையில் இப்போது எத்தனையாவது மாதம் என்றே குழப்பமாக உள்ளது. அன்று எங்கள் நிறுவனம் அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை என்றால் கண்டிப்பாக பலபேர் சென்னையில் மாட்டிக்கொண்டு இருந்திருப்போம் காரணம் என் நிறுவனத்தில் மூன்றில் இரண்டு பங்கு வெளியூர்வாசிகள்.
எத்தனை மாற்றங்கள், திரும்பி பார்த்தால் பெருமூச்சு விட தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து அரக்க பறக்க கிளம்பி சென்னை வாகன நெரிசலில், ரயிலில் பிதுங்கி அலுவலகம் சென்று வீடு திரும்புவது ஸ்ஸப்பா…., இன்று நிலைமை தலைகீழ் காலை எழுந்து குரூப்பில் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு தான் பல் விளக்கவே செல்கிறோம். அதே வேலை தான், அதே உழைப்பு தான் ஆனாலும் எவ்வளவு பெரிய மற்றம் எப்படி நாம் இதை தாங்கிக்கொண்டோம்?
ஒரு நாள் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமத்திக்க யோசித்த நிறுவனங்கள் பல இன்று நிரந்தரமாகவே தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதிக்கிறார்கள். என்னை பொறுத்தவரை வீட்டில் இருந்து பணி செய்வதால் இதை இழந்தோம் அதை இழந்தோம் என்று சொல்வது பழமை வாதம், உண்மையில் ஜாலியாக தான் உள்ளது. உண்மையாக உங்களின் பணியை மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய்தால் வீட்டில் இருந்து பணிபுரியும் முறை சொர்கம் தான்.
கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்:
- நம்மை கண்காணிக்க யாரும் இல்லை என்ற எண்ணம் எப்போதும் இருக்க கூடாது, உங்களின் பணிகள் அதனை வெளிப்படுத்திவிடும்.
- நேரம் மிக முக்கியம், பொது கூட்டங்கள், ஆலோசனை கூட்டங்கள், அமர்வுகள் போன்றவற்றில் சரியான அல்லது சில நிமிடங்களுக்கு முன்பாக சென்று கலந்துகொள்ள வேண்டும். உங்களில் நேரத்தை போல மற்றவர்களில் நேரத்தையும் மதித்து நடந்துகொள்ள வேண்டும்.
- செய்யும் வேலையை பதிவுசெய்துகொள்ள அல்லது குறிப்பு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அது மற்றவர்களுக்கு புரியும்படி இருந்தால் சிறப்பு.
- அனைத்து வேலைகளுக்கும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும், அதாவது உங்களுக்கு கொடுக்கப்படும் வேலைக்கு நீங்கள் தான் பொறுப்பு உங்களிடம் உங்கள் நிறுவனம் எதிர்பார்ப்பது நாளில் முடிவில் வந்து சொல்லும் தாமத காரணத்தை அல்ல.
- உண்மையாக இருக்க வேண்டும், சிலர் எப்போதும் ஆன்லைன்-இல் இருப்பார்கள் அனால் வேலை மட்டும் நடக்காது. இது எல்லாம் எங்கள் தாத்தா காலத்து டெக்னிக். அது சுத்தமாக வேலைக்கு ஆகாது ஒன்றை மனதில் கொள்ளுங்கள் உங்கள் மீது உங்கள் நிறுவனத்திற்கு நம்பிக்கை போய் விட்டால் அதனை மீண்டும் சம்பாதிப்பது மிகவும் கடினம்.
- தொடர்பில் இருக்க வேண்டும், ஒரு நாளைக்கு குறைந்தது ஒருமுறையாவது உங்கள் குழுவினருடனோ அல்லது உங்களோடு பணியாற்றும் நண்பர்களோடு பேசிவிட வேண்டும், நேரில் இருக்கும் போது இது மிக சாதாரணம். இங்கு பலவகையான பிரச்சனைகளுக்கு தொடர்பில்லாமல் இருப்பதே காரணமாகிறது.
- உங்கள் விசுவாசத்தை காண்பிக்க வேலை நேரம் இல்லாத நேரங்களில் சக பணியாளர்களை அலுவல் ரீதியாக தொந்தரவு செய்ய கூடாது.
- வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும்.
தொடர்ந்து பேசுவோம், இன்னும் எதிர்பார்ப்புகள் வரும் ஆண்டில் வரக்கூடும்.