வறண்ட மண்ணும், குளிர்ந்த மனிதர்களும்

இன்று நான் எனது நெருங்கிய நண்பரின் திருமணத்திற்கு சென்றிருந்தேன், அது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக மாறிப்போனது.

முன்பு என் நண்பன் எனக்கு போன் செய்த போது திருச்சியில் (மத்திய தமிழ்நாடு நகரம்) திருமணம் என்று சொல்லி என்னை திருமணத்திற்கு அழைத்து இருந்தான், ஆனால் அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது அது திருச்சி இல்லை திருச்சி தாண்டி 20 கிலோமீட்டர் என்று. இந்த வேகமான இயந்திர உலகில் வறண்ட மண்ணின் மனிதர்களும், பொய், கபடம் பேசாத மனிதர்களை மதிக்கும் மனிதர்கள் வாழும் கிராமமும் எனக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

கீழக்கண்ணுகுளம் கிராமம்

ஒவ்வொரு வீட்டிற்கும் இடையே குறைந்தபட்சம் 200 மீட்டர் இடைவெளி இருக்கிறது, 5 கி.மீ.க்கு ஒரு சிறிய கடை. இந்த சூழலில் தான் எனது நண்பர் கடந்த 2 ஆண்டுகளாக இணைய வழியாக வேலைசெய்ததால் என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

எனது நண்பரை அவர் தொழில் வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து எனக்குத் தெரியும். ஆனால் அந்தச் சூழலுக்கு அவருடன் சென்றபோதுதான் அவரது சூழ்நிலையை நினைத்து வியந்தேன். அவர் கட்டிய அழகான வீடு, வீட்டில் இருந்து வேலை செய்யும் அமைப்பு, அவருடைய அன்றாட வாழ்க்கை முறை அனைத்தும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. உண்மையில், நான் பொறாமையுடன் திரும்பினேன்.

உங்களால் நம்ப முடிகிறதா, அவர் வசிக்கும் ஏடிஎம்-க்கு செல்ல அவர் 6 கிமீ பயணம் செய்ய வேண்டும், Swiggy, Zomato அவர்களின் அகராதியில் இல்லை. கூகுள் மேப் மூலம் கூட அவர்களின் வாழ்விடத்தை கண்டுபிடிப்பது கடினம்.

இன்று நான் கற்றுக்கொண்டேன்,

  • வாழும் சூழலை மட்டும் விமர்சித்தால் வாழ்க்கையை வெல்ல முடியாது.
  • நாம் வாழும் சூழலை நமக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ள கொள்ள வேண்டும்.
  • தொழில்நுட்பம் மட்டும் ஒருவரது வாழ்வில் மகிழ்ச்சியை நிறைவு செய்யாது.
  • கடினமான சூழலில் இருந்து ஒருவர் முன்னேறினால் அது அவரைப் போன்ற மற்றவர்களும் முன்னேற தூண்டுதலாக இருக்கும்.
  • உங்கள் இலக்கை அடையும் வரை தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

உன்னை நினைத்து நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன் நவீன் குமார். உன் இல்லற வாழ்க்கையும், தொழில் வாழ்க்கையைப் போலவே சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கற்றதும் பெற்றதும்

அன்று மாலை எப்போதும் போல அலுவலகத்தில் அனைவரும் வேலை பார்த்துக்கொண்டு இருந்தோம், திடீரென ஒரு அறிவிப்பு வந்தது. இன்று முதல் ஒருவாரம் அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்று. ஐயா ஜாலி என்பது போல தான் இருந்தது. அறிவிப்பு வந்தது தான் மிச்சம் உடன் வேலை செய்யும் பல நண்பர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கட் போட ஆரம்பித்தார்கள். ஒருவகையில் அன்று என் நிறுவனம் எடுத்தது மிக பெரும் முடிவு.

சரியாக எண்ணி ஒரேவாராம் கழித்து அரசு கொரோனா பொது முடக்கத்தை அறிவித்தது முதலில் 14 நாட்கள், பிறகு 21 நாட்கள், ஒரு மாதம், இரண்டு, மூன்று என உண்மையில் இப்போது எத்தனையாவது மாதம் என்றே குழப்பமாக உள்ளது. அன்று எங்கள் நிறுவனம் அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை என்றால் கண்டிப்பாக பலபேர் சென்னையில் மாட்டிக்கொண்டு இருந்திருப்போம் காரணம் என் நிறுவனத்தில் மூன்றில் இரண்டு பங்கு வெளியூர்வாசிகள்.

எத்தனை மாற்றங்கள், திரும்பி பார்த்தால் பெருமூச்சு விட தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து அரக்க பறக்க கிளம்பி சென்னை வாகன நெரிசலில், ரயிலில் பிதுங்கி அலுவலகம் சென்று வீடு திரும்புவது ஸ்ஸப்பா…., இன்று நிலைமை தலைகீழ் காலை எழுந்து குரூப்பில் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு தான் பல் விளக்கவே செல்கிறோம். அதே வேலை தான், அதே உழைப்பு தான் ஆனாலும் எவ்வளவு பெரிய மற்றம் எப்படி நாம் இதை தாங்கிக்கொண்டோம்?

ஒரு நாள் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமத்திக்க யோசித்த நிறுவனங்கள் பல இன்று நிரந்தரமாகவே தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதிக்கிறார்கள். என்னை பொறுத்தவரை வீட்டில் இருந்து பணி செய்வதால் இதை இழந்தோம் அதை இழந்தோம் என்று சொல்வது பழமை வாதம், உண்மையில் ஜாலியாக தான் உள்ளது. உண்மையாக உங்களின் பணியை மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய்தால் வீட்டில் இருந்து பணிபுரியும் முறை சொர்கம் தான்.

கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்:

  1. நம்மை கண்காணிக்க யாரும் இல்லை என்ற எண்ணம் எப்போதும் இருக்க கூடாது, உங்களின் பணிகள் அதனை வெளிப்படுத்திவிடும்.
  2. நேரம் மிக முக்கியம், பொது கூட்டங்கள், ஆலோசனை கூட்டங்கள், அமர்வுகள் போன்றவற்றில் சரியான அல்லது சில நிமிடங்களுக்கு முன்பாக சென்று கலந்துகொள்ள வேண்டும். உங்களில் நேரத்தை போல மற்றவர்களில் நேரத்தையும் மதித்து நடந்துகொள்ள வேண்டும்.
  3. செய்யும் வேலையை பதிவுசெய்துகொள்ள அல்லது குறிப்பு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அது மற்றவர்களுக்கு புரியும்படி இருந்தால் சிறப்பு.
  4. அனைத்து வேலைகளுக்கும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும், அதாவது உங்களுக்கு கொடுக்கப்படும் வேலைக்கு நீங்கள் தான் பொறுப்பு உங்களிடம் உங்கள் நிறுவனம் எதிர்பார்ப்பது நாளில் முடிவில் வந்து சொல்லும் தாமத காரணத்தை அல்ல.
  5. உண்மையாக இருக்க வேண்டும், சிலர் எப்போதும் ஆன்லைன்-இல் இருப்பார்கள் அனால் வேலை மட்டும் நடக்காது. இது எல்லாம் எங்கள் தாத்தா காலத்து டெக்னிக். அது சுத்தமாக வேலைக்கு ஆகாது ஒன்றை மனதில் கொள்ளுங்கள் உங்கள் மீது உங்கள் நிறுவனத்திற்கு நம்பிக்கை போய் விட்டால் அதனை மீண்டும் சம்பாதிப்பது மிகவும் கடினம்.
  6. தொடர்பில் இருக்க வேண்டும், ஒரு நாளைக்கு குறைந்தது ஒருமுறையாவது உங்கள் குழுவினருடனோ அல்லது உங்களோடு பணியாற்றும் நண்பர்களோடு பேசிவிட வேண்டும், நேரில் இருக்கும் போது இது மிக சாதாரணம். இங்கு பலவகையான பிரச்சனைகளுக்கு தொடர்பில்லாமல் இருப்பதே காரணமாகிறது.
  7. உங்கள் விசுவாசத்தை காண்பிக்க வேலை நேரம் இல்லாத நேரங்களில் சக பணியாளர்களை அலுவல் ரீதியாக தொந்தரவு செய்ய கூடாது.
  8. வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும்.

தொடர்ந்து பேசுவோம், இன்னும் எதிர்பார்ப்புகள் வரும் ஆண்டில் வரக்கூடும்.

நான் என்றும் உங்கள் மாணவன் தான்

வேதியியல் ஆய்வு கூடத்திற்கு செல்லும் போது எப்போதும் ஒரு பயம் இருக்கும், ராமானுஜம் சார் என்றாலே ஒரு பீதி இருக்கும் ஆனாலும் அது தேவை தான். அரசுப்பள்ளியில் இவ்வளவு நேர்த்தியான வேதியியல் ஆய்வுக்கூடம் இருக்கும் என்றால் அது உங்களின் ஆய்வுக்கூடம் தான், அது தான் உங்கள் அறை.

நான் பார்க்கும் வேலைக்கும், வேதியியலுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றாலும் அந்த அறையில் வேதியியலை தாண்டி சுய ஒழுக்கம் என்றால் என்ன என்பதை கற்றுக்கொண்டேன் சார். உங்களின் கண்டிப்பு தான் இன்று என்னை இந்த நிலைக்கு கொண்டுவந்தது.

இன்றும் ஆசிரியர் என்றால் அனிச்சை செயலாய் உங்கள் முகம் தான் வந்து நிற்கிறது. நீங்கள் வேதியியல் மேதை மட்டும் அல்ல எங்களின் வாழ்வியலின் குரு. உங்களிடம் கற்றதும் பெற்றதும் தான் எங்களை திறம்பட இயங்க வைக்கிறது.

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ராமானுஜம் சார், மீண்டும் சொல்கிறேன் நான் என்றும் உங்கள் மாணவன் தான்