மாயாவி

உற்றாக மிகுதியில் சிலர் ஒருசில கோப்பைகளோடு நிறுத்திக்கொள்வர், ஆனால் நானோ வயிறு போதும் என்றாலும், உடல் சோர்வடைந்தாலும், மூளை தடுமாறினாலும் தொடர்வேன். என்னை என்னால் நிறுத்திக்கொள்ளவே முடியாது.

என் கண்களும், மனமும் எப்போதும் நிறையாது, இன்னும் சிறுது, இன்னும் சிறிது என்று அருந்திக்கொண்டே இருப்பேன்.

நான் சொல்வது மது போதை அல்ல, இருந்தாலும் அது சிலமணி நேரம் மட்டும் தான். இங்கு நான் சொன்னது கண்ணதாசனின் கவிதை என்னும் மாய போதை.

கண்ணதாசன், அவன் ஒரு மாயக்காரன், மனக்கண்ணாடி. நான் மனதில் நினைப்பதை, நான் சொல்ல கூச்சப்படுவதை, என்னால் சொல்லவே முடியாததை ஒலிபெருக்கி போட்டு மேடையில் சொல்கிறான். புத்தகமாய் எழுதி பதிவு செய்கிறான். கவிதை நடையில் பாடலாய் பாடுகிறான்.

இந்த பதிவில் கண்ணதாசனை பற்றித்தான் பேசப்போகிறேன், 20K கிட்ஸ்களே கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்.

பார்த்துவந்த பத்து பெண்களில் எந்த பெண்ணை பிடித்திருக்கிறது என்றால், பத்து பெண்களையும் பிடித்திருக்கிறது என்றார் பெண்பார்த்துவிட்டு வந்த பின்பு.

நான் கடவுள் இருப்பு பற்றி கவலை கொள்ளாதவன் என்றாலும் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்தை படித்துள்ளேன், குற்றவாளி தான் செய்த குற்றத்திற்கு நியாயம் கற்பிப்பது போல, மத சடங்குகளை அதன் சம்பர்தாய முறைகளை, அறிவியலை ஒதுக்கி வைத்துவிட்டு அல்லது புனைவாய் கற்பித்துவிட்டு கவிதை மொழியில் தர்க்கம் செய்திருப்பார் கவிஞர்.

கண்ணதாசனின் அரசியல் வாழ்க்கையை மூன்று கூறுகளாக பிரிக்கலாம்

திராவிட சிந்தனையில் கண்ணாததாசன், தமிழ் தேசிய கண்ணதாசன், தேசிய அரசியலில் கண்ணதாசன். பயப்பட வேண்டாம் இங்கு அரசியல் பேசப்போவது இல்லை. அதை வேறொரு நாள் வைத்துக்கொள்வோம்.

கவிஞர் அவரைப்பற்றி அவரே சொல்லுகிறார்,

“ஒருவனை மலையளவு தூக்கி பின் வலிக்கும் வரை தாக்குவதில் நான் மனிதர்களில் தெய்வ மிருகம், நான் அவர்களுக்கு கொடுத்திருப்பது கத்தியும் கேடயமும், அவர்கள் என்மீதே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்”

என்று பிறகு ஓரிடத்தில் சொன்னார், இனிமேல் வானளவு வாழ்ந்தாலும் மலையளவு தந்தாலும் மனிதரை பாடமாட்டேன் என்று குமுதத்தில் எழுதினார் ஆனால் அடுத்தவாரம் கண்ணதாசன் வெளியிட்ட கவிதையின் தலைப்பு “இந்திரா தான் இந்தியா, இந்தியா தான் இந்திரா” என்பது. முரண்களின் முடிசூடா மன்னன் கண்ணதாசன்.

அண்ணா பற்றி,

“முத்திலே அழகிருக்கும்,

முல்லையில் மனமிருக்கும்,

மொத்தமும் நிறைந்திருக்கும்,

எம் அண்ணா மொழிகின்ற வார்த்தையிலே”

என்பது பின்னர் திமுகவில் இருந்து விலகி தேசிய அரசியலிற்கு போன பின்ன அண்ணாவிற்கு விமர்சனம் செய்ய எழுதிய கவிதையில் தலைப்பு “தோழர் அண்ணாத்துரை பற்றி” என்பது, அண்ணா திண்ணையில் இருந்தாவது தனித்தமிழ்நாடு பெற்றே தீருவேன் என்று முழங்கிய காலம். “திண்ணையில் இருந்து பெற தனித்தமிழ் நாடு என்ன தொன்னையில் நெய்யா?” என்று கேலியும் கிண்டலுமாய் அந்த கவிதை தொடங்கும்.

கண்ணதாசனின் கவிதைகளில் என்னை மிகவும் கவர்ந்த, என்னை எதிரொலித்த , என்னை நொறுங்கிப்போக வைத்த கவிதை இது

“இருபதே வயதில் என்னை,

இருநூற்றி ஐம்பதாண்டு பருவத்தில் அவன் வைத்தானெனில்,

பார்க்கின்ற அனைத்தும் பார்த்து,

மருவற்ற பெண்கள் கூட்டம் மடியிலே புரண்டு,

நித்தம் ஒருகையில் ஒரு கிண்ணம்,

மறுகையில் ஒரு கண்ணம், உலகத்தை அனுபவிப்பேன்

இறைவனா விடுவான்? இறைவனா விடுவான்?

என்னை இரு காலும் விலங்கு பூட்டி,

குறையுள்ள மனிதனாக்கி,

குரங்குபோல் ஆட்டுவித்து.

முறையாக வயது போக, முதுமையும் நோயும் தந்து,

சிறைவாசம் முடிந்ததை போல்

ஜீவனை முடித்து வைப்பான்”

மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு வாருங்கள்,

இருநூற்றி ஐம்பதாண்டு காலம் வாழ வேண்டுமாம் அதுவும் இருபதே வயதில் வாழவேண்டுமாம். எப்படிப்பட்ட பெண்கள் கூட்டம் மருவற்ற பெண்கள் கூட்டம். ஒரு கையில் ஒரு கிண்ணம் ஒரு கையில் ஒரு கண்ணம் அட அட அட என்று படித்துக்கொண்டே வரும்போது, துக்கத்தில் நடந்து சுவரில் மோதி விழிப்பதை போல அடுத்த வரி தொடங்கும்

இறைவனா விடுவான், இறைவனா விடுவான் என்று. சிறைவாசம் என்பது தான் வாழ்க்கை என்று கவிதை முடியும் போது மனதிற்குள் ஏற்படும் வெறுமையை தவிர்க்கவே முடியவில்லை.

இறந்து 30 ஆண்டுகள்ஆனாலும், இன்னும் முந்நூறு மூவாயிரம் ஆண்டுகள் ஆனாலும், உங்கள் கவிதை எங்கள் உள்ளங்களின் என்றும் வாழும் கவிஞரே.

“போனால் போகட்டும் போடா” என்று இழப்பிலும் மனதை தேற்றிக்கொள்ளும் மனிதர்கள் இருக்கும் வரை, “வாழ நினைத்தால் வாழலாம்” என்று தன்னம்பிக்கை கொண்டு வாழும் மக்கள் இருக்கும் வரை, “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” என்று துணிவோடு அடுத்த அடி எடுத்துவைக்கும் இளைஞர்கள் இருக்கும் வரையில், “கண்ணே கலைமானே” என்று காதலியை கொஞ்சும் காதலர்கள் இருக்கும்வரை, உங்கள் கவிதைகள் என்றும் எங்கள் உள்ளங்களில் வாழும் கவிஞரே வாழும்.

இனிய கிறித்துமஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.