முன்னோர்களே சொன்னாலும் ஒருநாளும் “எண்ணும் எழுத்தும் கண்ணென தகாது” என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. மொழி வேறு எழுத்து வேறு என்று உறுதியாக நம்புபவர்களில் நானும் ஒருவன்.
தமிழ் மொழி மீது ஆர்வமும், பற்றும் எப்போதும் உண்டு ஆனால் ஒரு மொழி நான்காயிரம் ஆண்டுகளாக பேசப்படுவதனால் புனிதத் தன்மை அடைந்துவிடும் என்று நம்புவது மூடநம்பிக்கை. நான்காயிரம் ஆண்டுகளாக பேசப்படுவதனால் மூத்த மொழி என்றும், அனைத்து மொழிகளுக்கும் தாய் என்றும் கூறுவதை ஒருநாளும் ஏற்க முடியாது. அது மற்ற மொழிகள் மீது நாம் தொடுக்கும் தாக்குதல், ஆதிக்கம்.
சரி அப்போது தமிழ் இனி மெல்ல சாகும் அதை ஏற்கிறாயா என்றால், அப்படி ஒன்றும் ஆகாது என்பது என் ஆழ்ந்த நம்பிக்கை. காரணம் தமிழ் மொழி சந்திக்காத இன்னல்களே இல்லை. நான் இன்னும் நம்புவது தமிழ் மொழியின் இந்த நெகிழும் பண்பை தான்.
உதாரணமாக வேர்ட்பிரஸ் நிரலாக்க மொழி கிட்டத்தட்ட அனைத்து இந்திய பட்டியல் மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு வடிவம் வந்திவிட்டது, நானும் கடந்த 5 ஆண்டுகளாளுக்கு மேலாக தமிழ் மொழி மொழிபெயர்ப்பிற்கு பங்களிப்பு செய்கிறேன், பலரும் செய்கிறார்கள் ஆனால் இன்னமும் தமிழ் மொழிபெயர்ப்பு வடிவம் வரவில்லை, வராது.
காரணம் Plugin என்ற ஆங்கில சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் “சொருகி” ஆனால் சிலர் இந்த வார்த்தை மொழிபெயர்ப்பை ஏற்பது இல்லை நானும் ஏற்பது இல்லை, “பிளகின்” என்றே பயன்படுத்தலாம் என்பது என் கருத்து. அனைவருக்கும் எளிமையாக புரியும் என்பதே அதற்க்கான காரணம். இங்கு விவாதிக்க வாய்ப்பு அதிகம், மேலும் உள்ளூர் மொழியை விட உலக மொழியை பயன்படுத்த நாம் தயங்க தேவை இல்லை.
“பேருந்து” என்ற வார்த்தையை பொதுவில் நீங்கள் பயன்படுத்தினால் உங்களை செவ்வாய் கிரக மனிதர்கள் போல பார்ப்பார்கள் மக்கள், அது பிழை அன்று. “பஸ்” என்று அழைக்கலாம் தமிழ் மட்டும் தான் அனைத்து மொழிகளுக்கும் வார்த்தைகளை கடன் கொடுக்க வேண்டும் என்று நினைப்பதே ஆதிக்க மனநிலை. தேவைப்படின் கடன் வாங்கலாம் அது ஆங்கிலமாக இருந்தாலும் சரி சமஸ்கிருதமாக இருந்தாலும் சரி. அதை தமிழ் மொழியில் எழுதுவோம், தமிழக்குவோம்.
எழுத்தாணி கொண்டு புள்ளி இடாமல், கால் விலங்கு, தும்பிக்கை கொண்டு எழுதிவந்த தமிழ் எழுத்துகளை, நாகரிக சமூகம் இரட்டை கொம்பு, மூன்று சுழி, துணைக்கால் என எளிமை படுத்தியது, அதனால் தான் தமிழ் இன்னமும் நிற்கிறது, மீண்டும் பழமை நோக்கி நகர்வது தமிழை அந்நியப்படுத்துமே அன்றி ஒருநாளும் வளர்க்காது.