Site icon Rajan Vijayan

ஒரு‌ ‌உண்மை‌ ‌பாகனின்‌ ‌கதை‌ ‌-‌ ‌புத்தக‌ ‌விமர்சனம்‌ ‌

அந்த IFS (Indian Forest Service) அதிகாரிக்கு என்ன பெரிய கொம்பா மோலசுறுக்கு, அர்த ராத்திரி 5 மணிக்கு ஃபோன் பண்ணி கூப்டுறான் அதுவும் இந்த ஊட்டி குளுறுல… என்று புலம்பிக்கொண்டே எழுந்தான் அந்த வன காவலாளி. சில நேரங்களில் மேலதிகாரிகள் மீதுள்ள கோவங்களை நேரடியாக அவர்களிடம் காண்பிக்க இயலாது 🙂 . புலம்பிக்கொண்டு கடைசியாக வனசரக அலுவலகம் வந்தான், அங்கு அந்த காட்டின் வாசனை கூட என்னவென்று தெரியாத மிடுக்கான தேர்வெழுதி மட்டும் வெற்றிபெற்று அதிகாரி ஆன அவரை பார்த்ததும் ஒரு எரிச்சல். என்ன சார் காலைல என்றான்.

இல்ல இங்க ஒரு டாக்டர் இருக்காராம் அவர பாக்கணும், என்ன சார் உடம்பு சரியில்லையா, இல்லபா யானை டாக்டர், ஓ அவரா ஏன் சார் இந்நேரத்தல்… என்று விரியும் இந்த கதை உண்மையில் கதை அல்ல. சோறு சாப்பிடும் போது வாயில் தடைபடும் கல் போல சட்டென்று வேகம் குறைத்து மெல்ல மெல்ல கல்லை எடுக்கும் வித்தை போல மெல்ல மெல்ல படிக்க தூண்டியது.

ஒருமுறை என் மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த்க்கொண்டு இருந்தேன், அப்போது விலங்குகளும் அவை உண்ணும் உணவுகளும் என்ற தலைப்பு, வரிசையாக படிக்கும் போது மாடு என்று வந்தது, சட்டென்று என்பையன் பேப்பர் என்றான். அதாவது அவனுக்கு மாடு காகிதம் தான் உண்ணும் என்று தோன்றி இருக்கிறது காரணம் அவன் நாள்தோறும் இந்த நகரத்து வீதிகளில் அதை தான் பார்க்கிறான். நாம் இந்த உயிரினங்களுக்கு எவ்வளவு பெரிய அநீதி இழைக்கிறோம். இந்த புத்தகம் நம் இதை பற்றித்தான் விரிகிறது.

இந்த புத்தகம் யானைகளை பற்றி பேசுகிறது அதிலும் யானைக்கு மருத்துவம் பார்க்கும் ஒரு மாமணிதனை பற்றி பேசுகிறது. “டாக்டர் கே” என்று அனைவராலும் அன்போடு அறியப்பட்ட அவர்தான் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. இன்றும் மதம் பிடித்த யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தி கட்டுப்படுத்தும் முறையை உலகிற்கும் அறிமுகம் செய்த இந்த மருத்துவரை பற்றி மிக சுருக்கமாக சுவாரசியமாக பேசுகிறது இந்த நூல். எல்லாம் அறிய தகவல், நாம் அறிந்திராத நம் கற்பனைக்கும் எட்டாத யானைகள் பற்றியும், காடுகள் பற்றியுமான தகவல்.

ஒரு யானை ஒருநாளைக்கு 100 முதல் 150 கிலோ உணவு சாப்பிடும், 60 முதல் 80 கிலோமீட்டர் நடக்கும், யானைகள் ஒருநாளும் வலியால் துடித்து பிளிறாது. நீங்கள் பொதுவாக காடுகளுக்கு வார விடுமுறையை களிக்க செல்கிறீர்கள் சும்மாவா செல்கிறீர்கள் போகும்போதே ஒரு கேஸ் பியர், 2 கிலோ கறி கண்டது களியது எடுத்து சென்று காடை நாசம் செய்கிறீர்கள், ஒன்று தெரியுமா நீங்கள் காட்டில் வீசி செல்லும் அந்த ஒற்றை பியர் பாட்டில் யானைகளின் காலில் ஏறினால் என்ன ஆகும் என்று.

60 கிலோமீட்டர் நடக்கும் யானை மெல்ல மெல்ல வேகம் குறைக்கும், 3 டன் எடை கொண்ட யானை காலில் அந்த பியர் பாட்டில் மெல்ல மெல்ல உள்ளே செல்லும், சீழ் பிடிக்கும் வீங்கும், கடைசியாக யானை நடக்க இயலாமல் ஒரு மரத்தின் அடியில் சென்று நின்றுகொள்ளும். தன் கண்முன்னே தான் கால்கள் புழு பிடித்து அழுகுவதை பார்த்து ஒரே ஒருமுறை கண்களை இறுக்கி மூடி மீண்டும் திறக்கும், அது தான் யானைகளின் அதிகபட்ச அழுதல். வினாடிக்கு ஒருமுறை அல்ல அல்ல ஒவ்வொரு முறை சாகும். காடுகளில் இதுபோன்று பல யானைகளின் அழுகிய உடல்களை பார்க்கும் போது மனிதன் எண்ணவகையான மிருகம் என்று யோசிக்க தோன்றும். இவன் காடுகளை ரசிக்க வரவில்லை மாங்காய் துண்டுகளில் மிளகாய் பொடி தடவி குரங்குகளுக்கு கொடுக்கிறான், மலைபாதைகளில் விலங்குகள் குறுக்கே வந்தால் பொறுமை இல்லாமல் அவை எரிச்சல் அடையும் வண்ணம் ஒலி எழுப்புகிறான். ட்ரக்கிங் என்ற பெயரில் துப்பாக்கிகளை, கத்திகளை எடுத்துக்கொண்டு வனவாசம் செல்கிறான். விலங்குகள் இப்படி உன் வாழிடம் வந்தால் விடுவாயா? என்ற ஆழமான அழுத்தமான கேள்விகளை தொடுக்கிறது இந்த புத்தகம்.

விலங்குகள் கம்யூனிஸ்ட்டுகள் அவை தேவைக்கு மீறி உண்பது இல்லை, விலங்குகள் பகுத்தறிவுவாதிகள் அவை மூடநம்பிக்கையில் ஈடுபடுவது இல்லை, விலங்குகள் உலகவாதிகள் தன் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் சென்று நியாயம் கேட்பது இல்லை, விலங்குகள் சகிப்புத்தன்மை கொண்டவை அதனால் தான் நம் ஆட்டுவிற்ப்பு எல்லாம் ஆடுகின்றன. ஆனால் அவை ஒருநாளும் மனிதர்களை போன்று அல்ல இருக்கவும் முடியாது ஏனெனில் அவை தன்னுடைய இனத்தையே அழிக்கும் ஆயுதங்களை தயாரிப்பது இல்லை. மனிதநேயத்தை விடவும் உயிர்நேயம் மிகமுக்கியம் – உணவுச்சங்கிலியோடு இதனை குழப்பிக்கொள்ள வேண்டாம்.

நமக்கு தான் இந்த யானை டாக்டரை பற்றி தெரியாது, அந்த ஊட்டி டாப் ஸ்லீப் பகுதி விலங்குகளுக்கு நன்றாக தெரியும். உலகில் உள்ள பல விலங்குகள் ஆர்வலர்களுக்கும் நன்றாக தெரியும். காடுகளை பற்றி மட்டும் அல்ல யானைகள் பற்றி மட்டும் அல்ல, அந்த அற்புத மாமனிதனை பற்றி அறிந்துகொள்ள படிக்கவேண்டிய புத்தகம் இது.

ஜெயமோகன் எழுதிய “யானை டாக்டர்” – தன்னறம்  வெளியீடு – விலை ரூபாய் 50

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Exit mobile version